தி.மு.க. ஆட்சிதான் நூல் ஊழலுக்குக் காரணம் - மாணிக்கம் தாகூர்

Manickam tagore
மாணிக்கம் தாகூர்
Published on: 

நூல் கொள்முதல் ஊழலுக்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கொள்கையே காரணம் என்றும் நூலகங்களில் உள்ள போலி நூல்களை வாசகர்களே அகற்ற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ்தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை விட்டுள்ளார்.  

அந்த அறிக்கை :

“ 1948ஆம் ஆண்டு நூலகச் சட்டம் கொண்டு வந்து, இந்தியாவிற்கே முன் மாதிரியாக, நூலகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். அதனால்தான், அவர், 'நூலகத் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். அவரது முயற்சியால், காங்கிரஸ் ஆட்சியில், நூலகங்கள் தமிழ்நாடு முழுவதும் விரிவடைந்து, புதிதாக நூற்றுக்கணக்கான கிளைகள் தொடங்கப்பட்டன. நூலகங்கள் என்பது நவீன கோவில்களாக, அறிவைப் பெறும் இடமாக உருப்பெற்றன.

நூலகத் துறையில் இந்தியாவுக்கே, முன்னோடியாக, முன் மாதிரியாக தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், கோவை பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, திமுக ஆட்சியில் 2023ல் அறிமுகம் செய்யப்பட்ட, 'வெளிப்படைத்தன்மை வாhய்ந்த நூல் கொள்முதல் கொள்கை'யே காரணம்.

அதன்படி, நூலகங்களுக்கு நூல்களை வழங்க விரும்பும், பதிப்பாளர்கள், அதன் விபரங்களை, நூலகத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதை படித்து விட்டு, வாசகர்கள், இந்தெந்த நூல்களை வாங்கலாம் என பரிந்துரைக்கலாம். அதுபோல நூல் விலை நிர்ணயம் செய்யும் கொள்கையையும் திமுக அரசு திரும்பப் பெற்றது.

2023ஆம் ஆண்டுக்கு முன்புவரை, எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட தேர்வுக்குழுதான் தேர்வு செய்தது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, 'வெளிப்படைத்தன்மை வாhய்ந்த நூல் கொள்முதல் கொள்கை”, 'வாசகர்கள் பரிந்துரை செய்தார்கள்; வாங்கினோம்” என, வாசகர்கள் மீது பழிபோட்டு ஊழல் செய்ய வழிவகுத்துள்ளது.

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட, நூல்களை வெளியிடும் அகல் விளக்கு போன்ற பதிப்பகங்கள், நூலகங்களுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை விற்பனை செய்ய, திமுக அரசு கொண்டு வந்த கொள்கை தான் காரணம். அகல் விளக்கு மோசடி வெளியே வந்து விட்டது. இன்னும் பல பதிப்பகங்கள், அன்றைய ஆளுங்கட்சி, அதிகாரிகளின் துணையோடு நூல் கொள்முதலில் பெரும் மோசடிகளை செய்துள்ள தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. சுதந்திரம் அடைந்ததில் இருந்து கல்வித்துறையில், நூலகத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது.

எனவே, நூல் கொள்முதலில் பெரும் ஊழலுக்கு வழிவகுத்த, 'வெளிப்படைத்தன்மை வாhய்ந்த நூல் கொள்முதல் கொள்கை”யை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இதைப் பயன்படுத்தி, ஊழல் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பெரியார் அறிவுலகத்தில் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்கள் அனைத்திலும், போலி நூல்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஒவ்வொரு நூலகத்திலும் வாசகர் வட்டம் என்ற அமைப்பு இருக்கின்றன. வாசிப்பில் பெரும் ஆர்வம் கொண்ட, நூலகங்களுக்கு தொடர்ச்சியாக செல்லக்கூடியவர்கள் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள், அவரவர் நூலகத்தில், உள்ள போலி நூல்களை கண்டறிந்து, அவற்றை நூலகரிடம் கொடுத்து, அகற்றுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். நூலின் அருமை தெரிந்த, வாசகர்கள் மனது வைத்தால்தான், நூலகங்களில் படிந்த இக்கறையை அகற்ற முடியும்.” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.