
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் காலமானதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
”தனது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களின் தலைமையை ஏற்று 1969 இல் இளைஞர் காங்கிரசில் இணைந்து, காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். 2013 ஆண்டில் டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக திறம்பட செயலாற்றி பல்வேறு நன்மதிப்புகளை பெற்றவர்.
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களது திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.” என்று தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
”டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 4.00 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான திரு. குலாம் அகமது மிர் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை (18.09.2026) மாலை 3.00 மணியளவில் சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.” என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.