சத்திய மூர்த்தி பவன்
சத்திய மூர்த்தி பவன்

இராஜீவ்காந்தி ஜோதி யாத்திரையைக் கெடுப்பதா?- தமிழக காங்கிரஸ் கண்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜோதி யாத்திரையை கெடுக்கும் விதமாக யாரும் நடந்து கொள்ள வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

" இந்தியாவின் மாபெரும் தலைவரும், முன்னாள் பாரத பிரதமருமான திரு ராஜீவ் காந்தி அவர்கள் தமிழ் மண்ணில் 1991 மக்களவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தபோது படுகொலை செய்யப்பட நாள் மே 21. உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வந்த திரு ராஜீவ் காந்தி அவர்களின் புகழை பரவச் செய்கிற வகையில் பெங்களூரை சேர்ந்த தொழிற்சங்க தலைவர் மறைந்த திரு எஸ்.எஸ். பிரகாசம் அவர்கள் தலைமையில் கடந்த 33 ஆண்டுகளாக மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூருக்கு நினைவு ஜோதியை கொண்டு வந்து அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு பிறகு அமரர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்கள் பிறந்த நாளான ஆகஸ்ட் 20 அன்று அவரது நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திரு எஸ்.எஸ். பிரகாசம் அவர்களது மறைவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் இருந்து திரு துரை வேலு அவர்கள் தலைமையில் அமரர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை கொண்டு செல்கிற நிகழ்வை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த பின்னணியில் நடைபெறுகிற அமரர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரையின் முக்கியத்துவத்தை குறைக்கிற வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் எவரும் அதேபோன்ற யாத்திரையை நடத்துவதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. நீண்ட காலமாக நடைபெற்று வருகிற நடைமுறைக்கு இடையூறு விளைவிக்கிற வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் எவரும் எதையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதை மீறி செய்வதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவரும், அறிவியல் தொழில்நுட்ப புரட்சியால் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டிய அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் மே 21 நினைநாள் நிகழ்வுகள் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற வேண்டும். அதனுடைய புனிதத்தை பாதிக்கிற வகையில் எதையும் செய்ய வேண்டாம்." என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com