விநாயக சதுர்த்தி இந்த ஆண்டில் வரும் 27ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என பத்து கட்டளைகளாக பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன் விவரம்:
” சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது.
சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்- ஒருமுறைப் பயன்பாட்டு பிளாஸ்டிக், தெர்மாகோல், இரசாயனங்களை, பொருட்கள் அல்லது சாயங்களைப் பயன்படுத்தக்கூடாது.
சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்துங்கள்.
சிலைகளின்மேல் பூச்சுக்கும் அலங்காரத்துக்கும் நச்சுத்தன்மையுள்ள- மக்கும் தண்மையற்ற இரசாயன சாயங்கள் / எண்ணெய்வண்ணப் பூச்சுகளைப் பயன்படுத்தக்கூடாது.
சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள், துணிகளை பூஜைப் பொருட்களாக பயன்படுத்தவும்.
சூழலுக்குத் தீங்கான ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை பூஜைப் பொருட்களாக பயன்படுத்தக்கூடாது.
அகற்றி துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்காரத் துணிகளை மட்டும் பயன்படுத்தவும்.
வண்ணப் பூச்சுகள், பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒரு முறை பயன்பாட்டு அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
பிரசாத விநியோகத்திற்கு மக்கும் / மறுபயன்பாட்டுத் தட்டுகள், கண்ணாடிக் கோப்பைகளைப் பயன்படுத்தவும்.
பண்டிகையின்போது ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், உறிஞ்சு குழாய்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பொறுப்புடன் குப்பைகளைப் பிரித்து அப்புறப்படுத்துங்கள்.
குப்பை, கழிவுகளை பொறுப்பற்று கொட்டக்கூடாது.
அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்.
அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளைக் கரைக்கக் கூடாது.
எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளைப் பயன்படுத்தவும்.
பிளமெண்ட் பல்புகளை விளக்குகளாகப் பயன்படுத்தக்கூடாது.
அலங்காரப் பொருட்களை எதிர்காலப் பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.
ஒற்றைப் பயன்பாட்டு அலங்காரப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.”