
இரத்துசெய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. இரண்டாம் தொகுதித் தேர்வு மார்ச் 15இல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 எனப்படும் 2ஆம் தொகுதி, இரண்டாம் தொகுதி ஏ ஆகிய வகையான பணிகளுக்கு நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் தேர்வை எழுதிக்கொண்டிருந்தபோதே பாதியில் அவர்களிடமிருந்து விடைத்தாளை தேர்வுக்கூட அதிகாரிகள் வாங்கிக்கொண்டனர்.
தேர்வு எழுதிக்கொண்டிருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்களிடம் தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து த.வெ.க. தலைவர் விஜய் உட்பட பல அரசியல் தலைவர்களும் கடும் விமர்சனத்தை முன்வைத்த நிலையில், தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், இன்று தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வரும் 28ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் என்றும் போட்டியாளர்கள் தங்களின் ஓடிஆர் எண்ணைப் பயன்படுத்தி நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில், போட்டியாளர்கள் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி இதனால் விலகியுள்ளது.