டி.டி.எஃப்.வாசன்
டி.டி.எஃப்.வாசன்

டி.டி.எஃப். வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும்! - நீதிமன்றம் அதிரடி

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய யூ டியூபர் டி.டி.எஃப். வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் சாகசம்செய்ய முயன்று விபத்துக்கு உள்ளான டி.டி.எஃப். வாசன், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை கேட்டு டி.டி.எஃப். வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில், “ வாசன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் உயிர் தப்பியிருக்கிறார். இவரது யூ டியூப் சேனலை பின்தொடரும் 45 லட்சம் பேர் சிறார்கள். அவர்கள் இவரைப் பார்த்து அதி வேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவதும் நடக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவ காரணங்களைக் கூறி பிணைகேட்ட வாசனின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். சிறையிலேயே அவருக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க உத்தரவிட்டார்.

மேலும், “விளம்பரத்திற்காகவும் மற்ற இளைஞர்களைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட மனுதாரரின் வழக்கு மற்ற இளைஞர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். எனவே அவர் நீதிமன்றக் காவலில் நீட்டிக்க வேண்டும். அவரது யூ டியூப் பக்கத்தை மூடிவிட்டு பைக்கை எரித்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டும்.” எனக் கூறிய நீதிபதி, பிணை மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com