
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியில் நேற்று (ஜனவரி 8) சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜக- அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து பாஜக- அதிமுக கூட்டணியில் பாமகவும் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது பாஜக- அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அதிமுக- பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.
தற்போதைய நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியில் தமாகா, பாமக, அமமுக இடம் பெற்றுள்ளன.