
தினகரன் விஜய்கூட சேர நினைத்தார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
”நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய கட்சியினுடைய கொடி பறக்குது பிள்ளையார் சுழி போடப்பட்டது என்றெல்லாம் பேசியது அவர்கள்தான். நாங்கள் அல்ல. இன்றைக்கு நிலைமை மாறுகிறபோது ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் அமைச்சர்கள், ஐ.டி. விங்கைப் பொறுத்தவரை திமுகவின் மீதான குற்றச்சாட்டுகளைத்தான் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு இவர்கள் பி டீமாகச் செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இயக்கத்தின்மீது குற்றச்சாட்டுகளைச் சொல்வது என்பது எதிர்க்கட்சியின் நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று. இது வேதனை அளிக்கக்கூடிய ஒன்று.
அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த உங்களை அருகில் வைத்துக்கொண்டு த.வெ.க.வினர் அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி எனச் சொல்கிறார்கள் என்று பேச்சு வருகிறதே?
என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணம் செய்தவன். சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன். என்னை அடையாளம் காட்டியதே அவர்கள்தான். என் மீது யாராவது ஊழல் குற்றச்சாட்டு சொல்வார்களேயானால் வழக்குகளின் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றம் வரையிலும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் தூய்மையானவன் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் வழக்கு தொடரப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் நான் ஊழல் எதையும் செய்யவில்லை. போக்குவரத்து கழகத்தின் வருவாயை ஈட்டியிருக்கிறேன் என்றுதான் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், இன்று என்னைப்பற்றி அவர்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. அப்படி யாராவது கருத்து சொன்னால் அவர்கள் மீது வழக்கு மன்றத்தின் மூலமாக வழக்கு தொடரப்படும்.
தினகரன் கூட்டணிக்கு வராதது தவெகவுக்கு ஏமாற்றமா?
ஏமாற்றம் இல்லை. ஒவ்வொருவரின் நிலை அப்படி இருக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு நிலை எடுப்பதுபோல் அவரும் ஒரு நாளைக்கு ஒரு நிலையை எடுக்கிறார். எங்களோடு வரவேண்டும் என்று நினைத்தார். அவருக்கு என்ன சூழ்நிலை என்பதை என்னால் சொல்ல முடியாது. எங்கு சென்றாலும் வாழ்க.
ஓபிஎஸ் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதா?
ஒவ்வொரு தடவையும் பேசி முடிச்சவுடனே டெல்லியில் இருந்து வந்துடறாங்க. பிரச்சினை எங்களுக்குதானே தெரியும். நான் சொல்லாமல் இருக்கும்வரை நல்லது.
ராமதாஸ் பேசுவதாக தகவல் வருகிறதே?
பேசிக்கொண்டு இருக்கிறார் என்று எனக்கு செய்திகள் வந்திருக்கிறது. உள்ளே நுழையும்போதுதான் பார்த்தேன். நல்லது நடக்கட்டும்.
அதிமுக அண்ணாவை மறந்துவிட்டதாக விஜய் பேசியிருக்கிறாரே?
உண்மையிலேயே ரெண்டு கட்சியும் மறந்துட்டாங்க. அது உங்களுக்கு தெரியுதா இல்லையா? அம்மாவை மறந்தார்கள், தலைவரை மறந்தார்கள், அண்ணாவை மறந்தார்கள்… அதுக்குத்தான் நான் வெளியில் வந்தேன். ஒருத்தர் படத்தையும் போடாம, சிங்களா தன் படத்தை மட்டும் போட்ட வேடிக்கையை நீங்க பார்த்தீர்களா இல்லையா? எல்லோரையும் மறைத்து ஒருவரைஉருவாக்குவது என்பது இயலாத காரியம். யாரால் நாம் வளர்கப்பட்டோம் என்பதை மறந்துவிடக் கூடாது. என் பேக்கட்டில் படம் இருப்பதை பார்த்தீர்களா இல்லையா? இந்த இயக்கத்தில் எனக்கு ஜனநாயகம் இருக்கிறது.”