உத்தரப்பிரதேச கம்பெனி சென்னைப் பேருந்து நடத்துநர்களை நியமிப்பதா? - அன்புமணி

Anbumani Ramadoss
அன்புமணி
Published on

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக குத்தகை முறையில் நடத்துநர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

“சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 3858 பேருந்துகளை இயக்கி வருகிறது. இவற்றை இயக்குவதற்குத் தேவையான 18,898 பணியிடங்களில் 6,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய அரசும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும் குத்தகை முறைப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வருகின்றன.

அந்த வரிசையில் இப்போது 1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குத்தகை முறையில் நியமிக்கப்படும் நடத்துநர்களின் ஒப்பந்தக் காலம் 11 மாதங்கள் ஆகும்.

தி.மு.க. ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்களை த.வெ.க. அரசு வழங்கியிருக்கறது.

குத்தகை முறை பணி நியமனங்கள் தொழிலாளர்களின் உழைப்பையும், உரிமைகளையும் சுரண்டக் கூடியவை என்பதை அறிந்தும் அவற்றை த.வெ.க. அரசு தொடர்வது ஏன்?

தி.மு.க. ஆட்சியில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் குத்தகை முறையில் ஓட்டுநர்கள் & நடத்துநர்களை நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

சமூகநீதி தான் தங்களின் முதன்மைக் கொள்கை என்றும் த.வெ.க. கூறி வருகிறது. அப்படிப்பட்ட த.வெ.க., இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத, உழைப்பைச் சுரண்டக்கூடிய குத்தகைமுறை பணி நியமனங்களை நடைமுறைப்படுத்துவது ஏன்? என்பது பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.

அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை நியமனங்களை ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டு எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தக் கொள்கைகளில் த.வெ.க. அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும்.” என்று அன்புமணி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com