ஆளும் கட்சிக்கு அவமானமாக இல்லையா?- வேல்முருகன்

panrutti velmurugan
பண்ருட்டி வேல்முருகன்
Published on: 

”தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீது, ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தமிழகம் முழுவதும் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

” மதுரையில் 15 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தவெக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் காசிமேடு பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வார்டு பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் பெண்ணிடம் பாலியல் தொல்லை அளித்ததாக ஒன்றியச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் பெண் கட்சி நிர்வாகிக்குப் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில் கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோவையில் பெண் கட்சி நிர்வாகிக்குப் பாலியல் தொல்லை, சாதிய அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்ததாக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் நிர்வாகி அளித்த பாலியல் தொல்லைப் புகாரின் அடிப்படையில், பூந்தமல்லி தொகுதி வேட்பாளரும் திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பிரகாசம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மறுத்து அவரது மனைவியும் எதிர்ப்புகார் அளித்துள்ளதால், இரு புகார்களும் விசாரணையில் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 இலட்சம் பெற்றதாக எழுந்த புகாரில், ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் தவெக மாவட்ட நிர்வாகி வீராசாமி கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் அதனை மறுத்துள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை கோரியுள்ளது.

ஆளுங்கட்சியினரின் இத்தகைய செயல்பாடுகளால், தமிழ்நாட்டின் சட்டம்–ஒழுங்கு நிலைமை குறித்துப் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, தமிழ்நாட்டின் சட்டம்–ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தச் சந்திப்பின் நோக்கம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழல் மாநிலத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.

இவை அனைத்தும் வெவ்வேறு மாவட்டங்களில் வெளியாகியுள்ள செய்திகள். ஒவ்வொரு புகாரும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், இத்தகைய புகார்கள் தொடர்ந்து எழுவதற்கான காரணம் என்ன என்பதற்கு ஆளுங்கட்சித் தலைமை மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது.

மேலும், ஏற்கெனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிர்வாகிகளைத் தவிர, கட்சியின் பிற நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களின் செயல்பாடுகள் குறித்தும் முறையான கண்காணிப்பு அவசியம். புகார்கள் வெளிவந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பது என்ற அணுகுமுறையைக் கைவிட்டு, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருப்பவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், புகார்களைப் பெற்று விசாரிக்கவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் முறையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதனை அந்தக் கட்சியின் தலைமை செய்யுமா?

பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, ஊழலற்ற நிர்வாகம் என்று பொதுவெளியில் முழக்கமிடும் ஓர் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மீதே இத்தனை வகையான குற்றச்சாட்டுகள் எழுவது ஆளுங்கட்சிக்கு அவமானம் இல்லையா? தங்களது கட்சியினரின் செயல்பாடுகளையே கட்டுப்படுத்த முடியாதவர்கள், ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனையும் எவ்வாறு பாதுகாக்க முடியும்?

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க வேண்டும். புகார்களை அளிக்கும் பெண்களுக்கே கட்சிக்குள் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது? இத்தகைய செயல்பாடுகளைக் கண்டித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்சித் தலைமை, உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம், இத்தகைய போக்குகளை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆளுங்கட்சியினரே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருந்தால், அந்த ஆட்சி தமிழகத்தின் நலனைக் காக்கும் ஆட்சியாக எப்படி இருக்க முடியும்? இத்தகைய மோசமான நிர்வாகத்தின் கீழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? என்ற கேள்விக்கான பதிலை, வாக்களித்த மக்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.” என்று  வேல்முருகன் கூறியுள்ளார்.