முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

கேரளம் மீண்டும் சேட்டை... முல்லைப் பெரியாற்றில் அணையா? தடுக்கச் சொல்லும் வேல்முருகன்!

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள திட்டமிடுகிறது; இதை உடனடியாகத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024 இல் கேரள அரசின் நீர்வளத்துறை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை வரும் மே 28 தேதி பரிசீலனைக்காக ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பட்டியலிட்டுள்ளது.

இந்த புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, பெரியாறு கிராமத்தில் அமைகிறது. இந்த இடம் வண்டிப்பெரியாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. தற்போது இருக்கும் அணையிலிருந்து 1200 அடி கீழ்திசையில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.” என்றுதெரிவித்துள்ளார். 

மேலும், ”தற்போதுள்ள அணையின் வயது 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பற்ற நிலையை எட்டியுள்ளதாகவும், அணை உடைந்தால் கேரளாவில் பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கான நீரைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யவும், இப்புதிய அணை அவசியம் எனவும், புதிய அணை கட்டிய பின்னர் தமிழ்நாட்டிற்கு இப்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும் என கேரள அரசு கூறியிருக்கிறது.

கேரள அரசு மேற்குறிப்பிட்டிருக்கும் வாதம், தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளது போல் பாசாங்கு காட்டி, முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்து தரைமட்டமாக்க மூர்க்கமாக முயலுகின்ற வார்த்தை தான்.

உச்ச நீதிமன்றம் 27-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்த பிறகு முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் சிறிதுகூட உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை. 142 அடி வரை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தேக்க விடாமல் தடுத்துவிட்டார்கள். சிற்றணையைச் செப்பனிடவும் விடவில்லை.

மண்ணியல் வல்லுநர் குழுவையும், நீரியல் வல்லுநர் குழுவையும் அமர்த்தி அவற்றைக் கள ஆய்வு செய்ய வைத்து, அந்தக் குழு அளித்த பரிந்துரைக்கு ஏற்பவே மேற்படித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அத்தீர்ப்பையும் கேரள அரசு பின்பற்றவில்லை.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதிட் திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப்போவதாக கேரள அரசு ஆசை வார்த்தை காட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அவர்கள் கூறிவரும் பேரழிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. காரணம் அந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 10 டி.எம்.சி. மட்டுமே. (1 டி.எம்.சி = நூறு கோடி கன அடி). முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும்.

இந்த இடுக்கி அணை பாதியளவு நிரம்புவதற்குகூட அதற்கு நீர்வரத்து இல்லை. இந்த அணையை முழுக் கொள்ளளவும் நிரப்பி, ஆண்டு முழுவதும் நீர் மின்சாரம் தயாரிக்க முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே கேரள அரசின் திட்டம்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த அவர்கள் வகுத்த சூழ்ச்சித் திட்டமே முல்லைப் பெரியாறு அணை வலுக்குறைவாக உள்ளது, அது எந்த நேரத்திலும் உடைந்துவிடும்; எனவே அதை உடைத்துவிடவேண்டும் என்ற பரப்புரையாகும்.

வெள்ளைக்காரன் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நாட்டி 1924இல் சிறந்ததொரு ஒப்பந்தம் செய்துவைத்தான். தில்லி ஆட்சியில் அது செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். காலம் காலமாகக் காவிரியில் பாசனம் பெற்ற 28 லட்சம் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

கடந்த 1895இல் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி 999 ஆண்டுகளுக்கு அது தமிழ்நாட்டிற்குரியது என்று ஒப்பந்தம் செய்து வைத்தான் வெள்ளைக்காரன். இன்று அந்த ஒப்பந்தம் செல்லாது என்கிறார்கள். அணையை உடைக்க நாள் பார்க்கிறார்கள். அந்த அணையால் பாசனம் பெற்ற 2 லட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

1950க்குப் பிறகு பாலாற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டது ஆந்திரா அரசு. இப்போது, மேலும் அணைகளை கட்ட முயலுகிறது ஆந்திரா அரசு. இனி பாலாற்றில் இருந்து கசிவு நீர் கூட தமிழகத்திற்கு வராது.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று மூன்றையும் இழந்துவிட்டால் பாசனத்திகு மட்டும் மல்ல குடிநீருக்கு கூட தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடையாது. எனவே, தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது. கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும்.” என்று வாழ்வுரிமைக் கட்சியின் அறிக்கையில் கூறப்ப்ட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com