மே முதல் தொடரும் கொலைகள்- மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?

murder
கொலை
Published on: 

மே மாதம் முதல் தமிழ்நாட்டில் கொலைச் சம்பவங்கள் தொடர்கின்றன; மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

”தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் கொலை, வெட்டிக்கொலை, பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்கள் என தொடர்ச்சியாக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், தீபாவளி போன்ற நாளில் கூட பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.” என அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். 

மேலும், ”நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி நாளில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல் துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஊடகச் செய்திகளின்படி, தீபாவளி நாளில் கொலை சம்பவங்களால் உயிரிழப்புகள் பதிவான மாவட்டங்கள் எட்டு. அவற்றில் திருச்சியில் 3 பேரும், சிவகங்கையில் 2 பேரும், சென்னை, திருவள்ளூர், கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 உயிரிழப்புகள்.

மே மாதம் முதல் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், குற்றங்களை தடுப்பதற்காக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

கொலைக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பதில் காவல்துறைக்கு என்ன சிக்கல்?

காவல்துறை அதிகாரிக்கே உயிர்ப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது?

பள்ளி செல்ல வேண்டிய வயதில் இருக்கும் சிறுவர்கள் கொலை செய்யப்படும் அளவுக்கு வன்முறை எப்படித் தலைதூக்குகிறது?

பொதுமக்கள் வீதிகளில் அச்சமின்றி நடமாடுவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை இல்லையா?

ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்குப் பிறகும் கைது நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பது மட்டுமே சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகிவிடுமா?

தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எத்தனை என்று கணக்கிட்டு சொல்ல வேண்டிய அரசு, இன்று கொலைகளால் உயிரிழந்த மாவட்டங்களின் எண்ணிக்கையைச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அவமானகரமானது.

மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்தால், மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் அளிக்க முடியும்?

கொலைகள் நிகழ்ந்த பிறகு குற்றவாளிகளைக் கைது செய்வது மட்டுமல்ல, கொலைகள் நிகழாமல் தடுப்பதற்கான காவல்துறை கட்டமைப்பை வலுப்படுத்துவதும் அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும்.” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.