
”கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4ஆம் வகுப்பு 8 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது.” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
” குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது அரசின் பரிசல்ல. அடிப்படை உரிமை. ஆனால், கடந்த சில மாதங்களில் கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பின் கொலை, திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் உயிரிழப்பு, சென்னை பூந்தமல்லியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை, திருச்சியில் 14 வயது சிறுமி தொடர்பான வழக்கில் 9 பேர் கைது என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன.
இப்போது தேன்கனிக்கோட்டை.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இங்கும் ரோந்து மேற்கொள்கிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்பு படை, கண்காணிப்பு, காவல்துறை, போக்சோ சட்டம், இத்தனைப் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும் ஒரு 8 வயது குழந்தை குற்றவாளியின் கைகளில் சிக்கியது எப்படி?
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு எங்கே?
பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் ரோந்து எங்கே?
குற்றத்தை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை எங்கே?” என அவர் வரிசையாகக் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
மேலும், ”குற்றவாளியைப் பிடிப்பது அவசியம். ஆனால் குழந்தை பாதிக்கப்பட்ட பிறகு விழித்தெழுவது பாதுகாப்பு அல்ல. அந்தக் கொடுமை நிகழாமல் காப்பதே ஆட்சியின் கடமை.
முதலமைச்சர் அவர்களே!,
இது அரசியல் குற்றச்சாட்டு அல்ல. தங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரின் நடுங்கும் மனதிலிருந்து எழும் கேள்வி.
எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவா? வேண்டாமா?
இந்தக் கேள்வி தமிழகத்தில் எழும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
தேன்கனிக்கோட்டை சிறுமி வழக்கில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உயர்தர மருத்துவம், உளவியல் ஆதரவு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான முழுமையான உதவிகளை வழங்க வேண்டும்.
மேலும், கடந்த 100 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான முக்கிய குற்ற வழக்குகளில் கைது, குற்றப்பத்திரிகை, விசாரணை, தண்டனை, நிலுவை ஆகிய விவரங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
சிங்கப் பெண் என்ற பெயர் மட்டும் போதாது. ஒரு குழந்தை அச்சமின்றி பள்ளிக்குச் சென்று உயிரும் கண்ணியமும் காக்கப்பட்டு வீடு திரும்ப வேண்டும். அதுவே அந்தப் படையின் வெற்றி.
இந்தக் கொடூர சம்பவத்திற்கு மீண்டும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, குற்றவாளியை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தரவும், இனியொரு குழந்தை பாதிக்கப்படாத வகையில் நிரந்தரமான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.