
சென்னையைத்தொடர்ந்து கடலூரிலும் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கிடைத்தும் அவரின் பிரச்சாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் நெல்லை, தூத்துக்குடியைத் தொடர்ந்து இன்று வட தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவும், வடலூர், சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் சாலை வலம் செல்லவும் த.வெ.க. தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதன்படி, ஆணையமும் ஒப்புதல் அளித்திருந்தது.
ஆனால், த.வெ.க. தரப்பில் திடீரென இன்று கடலூர் பிரச்சாரத்தை இரத்துசெய்துவிட்டார்கள். அதிகாரபூர்வமான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.
எனினும், அக்கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, சென்னையிலிருந்து சாலைமூலம் புதுச்சேரி வழியாகச் செல்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அங்கு இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதைக் காரணமாகக் கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. சாலை வழியாகத்தான் கடலூர் செல்லமுடியும் என்பதால், அந்த வழியாகச் செல்ல விஜய் தரப்பு விரும்பவில்லை. எனவே, அந்தப் பிரச்சாரத்தையே இரத்துசெய்துவிட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.