விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு, “யார் இங்க பிறப்பால் முதல்வர் ஆனது; மக்கள் தேர்ந்தெடுத்துத்தான் முதல்வரானார். அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு” என துணை முதலமைச்சர் உதயநிதி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், விசிக துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்." என்று பேசினார்.
இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’தமிழகத்தில் மன்னராட்சி நடப்பதாக நேற்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி, “நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்றார்.
“பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது" எனப் பேசியது குறித்து கேள்விக்கு, "யாருங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆனார். அந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு…தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. " என காட்டமாக உதயநிதி பதிலளித்துள்ளார்.