சட்டப்பேரவையா, சூப்பர் சிங்கர் நிகழ்வா? - உதயநிதி கிண்டல்

Udhayanidhi
உதயநிதி
Published on

சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

அவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

"நாங்கள் ஒரு கேள்வி கேட்டால், நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அமைச்சர்கள் பதில் கூறுகிறார்கள். கேள்விகள் கேட்டால் பதில் சொல்லலாம். ஆனால், இப்போது பாட்டெல்லாம் பாடுகிறீர்கள்.

எங்களுக்கு இப்பொழுதெல்லாம், சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமோ என்று சந்தேகம் வரும் அளவிற்கு பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

பேரவைத் தலைவராகிய நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிடுகிறீர்கள். ஆனால், இவை அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், யூ டியூபிலும், இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸாக கட்செய்யப்பட்டு அதிகமாகப் பகிரப்படுகிறது.

இதனால், நீங்கள் நீக்குவதற்கான அர்த்தம் இல்லாமல் போகிறது என்பதை பேரவைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

மற்றொன்று, நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதலமைச்சர், தன்னுடைய மேசை மீது மூன்று கோப்புகள் இருப்பதாகவும், அந்த கோப்புகளைத் திறந்து பார்க்க வைத்திராதீர்கள் என்று கூறி, எங்கள் அரசைக் குற்றம் சாட்டும் வகையில் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

நாங்கள் கேட்டுக்கொள்வது, தயவுசெய்து அந்தக் கோப்புகளைத் திறந்து பார்த்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

எதற்காக பயப்படுகிறீர்கள்? எதற்காக காலம் தாழ்த்துகிறீர்கள்?

இதையே 3 மாதங்களாகச் சொல்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் திறப்பீர்களா? நல்ல நேரம் வந்தால்தான் திறந்து பார்ப்பீர்களா?" என்று உதயநிதி பேசினார்.

இதைத் தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:

"எதிர்க்கட்சியின் உறுப்பினர், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார். மேலும், மிசாவையே பார்த்ததாகக் கூறினார். குறிப்பிட்ட சில துறைகளின் வெள்ளை அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு முதலமைச்சரின் மேசையில் வைத்துள்ளோம்.

உரிய ஆய்விற்குப் பிறகு, குற்றத்திற்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைதான் முதல்வர் அவ்வாறு குறிப்பிட்டார்." என்று ஆதவ் அர்ஜூனா பதிலளித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com