இன்ஸ்டன்ட் அரசியல், புளிசாத மாநாடு, ரத்தக்கறை... பா.ஜ.க., அ.தி.மு.க. மீது உதயநிதி கடுமை!

இன்ஸ்டன்ட் அரசியல், புளிசாத மாநாடு, ரத்தக்கறை... பா.ஜ.க., அ.தி.மு.க. மீது உதயநிதி கடுமை!

தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பயணம்செய்த அமைச்சர் உதயநிதி, அதையொட்டி நான்கு பக்க அறிக்கை ஒன்றை இன்று காலையில் வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க., பா.ஜ.க., ஆளுநர் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

” குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி-மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்’ என்று நினைக்கையில், சி.சி.டி.வி. காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது.

கொள்கைப் பயணத்தில் இளைஞர்களைக் கொள்கை ரீதியாக வளர்த்தெடுத்து, அவர்களைத் தலைவர்களாக உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தி, அவர்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி… என அது ஒரு நீண்ட நெடிய பயணம். ஆனால், `இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிடவேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது.

இந்தப் போலி அரசியல்பயணத்தில் ஆங்காங்கே இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள்தான்.

இந்த நாடகத்தில், ‘தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுத்தவர்கள்’, `நீட் தேர்வை நுழையவிட்டு, 20-க்கும் மேற்பட்டோரின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்’, ‘ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்புக்கு காரணமானவர்கள்’, மக்களின் வரிப் பணத்தில் பல லட்சம் கோடி ரூபாயைச் சுருட்டியவர்கள்’ என்ற அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, இரத்தக் கறையைக் கழுவிவிடப் பா.ஜ.க. நினைக்கிறது. ‘பூசியவர்களே கறைகளைக் கழுவியும் விடுகிறார்களே’ என்று எடப்பாடியும் கைகளைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்குகள் போன்ற முக்கியமான பல வழக்குகளைச் சி.பி.ஐ கிடப்பில் போட்டிருப்பது போன்றவை எல்லாம் அதைத்தான் உணர்த்துகின்றன.

“சமீபத்தில், மதுரையில் நடைபெற்று முடிந்த ஒரு கட்சியின், மாநாட்டில் அதன் கொள்கைகள் குறித்துப் பேசப்பட்டதா, அந்தக் கட்சியின் ஆட்சியின் சாதனைகளாக எதுவும் விவாதிக்கப்பட்டதா? அந்த `புளி சாத மாநாடு’ போல் இல்லாமல் நம் இளைஞர் அணி மாநாடு நம் கொள்கைகளை, சாதனைகளைப் பேசக்கூடியதாக இருக்கும்.” என்று உதயநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

தன்னுடைய பயணம் பற்றி பலவாறாக பெருமிதம் அடைந்துள்ள அவர், இந்தப் பயணத்துக்காக கட்சி நிர்வாகிகளுக்கும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் செயலாளர் தாரேஸ் அகமதுவுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளார்.

தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கிவரும் அவர், அந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டு பரவசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தி.மு.க.வின் 72 மாவட்டக் கழகங்களில் 46 மாவட்டங்களின் சார்பில், கட்சி முன்னோடிகளுக்கு 44 கோடியே 73 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com