
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியுள்ளார்.
”சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.
மாணவர் பாரதிதாசனைப் பழிவாங்க, அவருடைய கல்வியைப் பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.
ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.
அவருக்குச் சேரவேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த ரீல்ஸ் அரசு துணை நிற்க வேண்டும்.” என்று தன் சமூக ஊடகப் பதிவில் உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.