பவுடர் அமைச்சர்... உதயநிதி பேச்சால் அமளி!

TVK Minister Sarathkumar
த.வெ.க. அமைச்சர் சரத்குமார்
Published on

கோவைக் கல்லூரி மாணவன் அமுதன் படுகொலை செய்யப்பட்டது தொடர்டாக கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து இன்று சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.

கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

“கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளன. பத்து பேர் சண்டை போட்டு, பத்து பேர் மோதிக்கொண்டால் அதை கோஷ்டி பூசல் என்று சொல்லலாம். ஆனால், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதனால் இது படுகொலை.

அரசின் அலட்சியத்தாலும், காவல்துறையின் பொறுப்பற்ற போக்காலும்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஒரு வாரத்தில் கொலைகள் மட்டுமல்ல பாலியல் குற்றங்களும் அதிகமாக நடந்துள்ளது. இதைத் தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

பள்ளி கல்லூரிகளில், வன்முறைக்கு எதிராக ஒழுக்கத்தை வளர்த்தெடுக்க கவுன்சிலிங் வகுப்புகள் நடத்த வேண்டும். போதைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், இந்த கொலை கோஷ்டி மோதல் கொலை என போலீசார் அளித்த விளக்கங்களைக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நிர்மல் குமார், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தில்லியில் கைதான ஜாஃபர் சாதிக்கிறகும் முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது என்று குறிப்பிட்டார்.

அதற்கு, தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சம்பந்தப்பட்ட நபர் மீது அப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுந்த உடனே, அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். ஆனால், இப்போது ஓர் அமைச்சரே ஐ.பி.எல். மேட்ச்சில் அமைச்சர் பவுடர் நொறுக்கியதை உலகமே பார்த்தது. குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் என அவர் கதை விட்டார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தியதா; ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, சர்ச்சைக்குள்ளான அமைச்சர் சரத்குமார், “ஸ்டேடியத்தில் நடைபெற்ற விவகாரம் குறித்து நான் ஏற்கெனவே விளக்கத்தை அளித்து விட்டேன். அவர்களுக்கு பல்வேறு கருத்துகள் முரண்பாடு இருக்கலாம். அந்த சமயத்தில் தி.மு.க. ஆட்சிதான் நடைபெற்றது. அப்பொழுது அந்த ஸ்டேடியத்தில் போதைப்பொருள்களை தி.மு.க.தான் விற்றார்கள் என்று ஒத்துக் கொள்வார்களா ? ஆதாரம் இல்லாமல் தேவையில்லாமல் பேசக்கூடாது. விளக்கம் அளித்த பின்னரும் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம்” என்று கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com