அண்ணா தி.மு.க. அல்ல, அமித்ஷா தி.மு.க. - உதயநிதி கிண்டல்
அண்ணாவின் பெயரைக் கொண்டிருக்கும் கட்சி அல்ல அதிமுக, அமித்ஷாவின் பெயரைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் இன்று ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் தினமலரின் சர்ச்சைக்குரிய செய்தி குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த உதயநிதி, “கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத திட்டம், இது. 31ஆயிரம் அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் இந்தத் திட்டத்தை வாழ்த்துகின்றனர். ஆனால், அந்தக் குறிப்பிட்ட பத்திரிகை வன்மத்தோடு, மிக மோசமான கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதற்கு தமிழகம் முழுவதுமிருந்து எந்த அளவிற்கு எதிர்ப்பு வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். யாராக இருந்தாலும், அந்த மாணவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு கருத்து சொல்லலாம்.” என்றார்.
தினமலர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, “தலைவர்(முதலமைச்சர் ஸ்டாலின்) முடிவெடுப்பார்” என்று உதயநிதி கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக 2018ஆம் ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது; ஆனால் இப்போது ஆதரவு தெரிவித்துள்ளது; இதை எப்படி பார்க்கிறீகள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, ”அவங்க ஆட்சியில் இருக்கின்றபோது எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல் என எல்லாவற்றிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகின்றனர். எல்லா தோல்வியையும் ஒரே நேரத்தில் சந்தித்தால் மனசு கஷ்டப்படும். இந்த காரணத்துக்காகத்தான் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை வரவேற்று இருக்கிறார்கள்.” என்றார் உதயநிதி.
அண்ணா பெயர் தாங்கிய கட்சி மாநில சுயாட்சிக்கு எதிராக என ஒரு செய்தியாளர் கேட்கத் தொடங்கி அதை முடிப்பதற்கு முன்னரே குறுக்கிட்ட உதயநிதி, “அண்ணா பெயருனு யாருங்க சொன்னா? அது அமித் ஷா பெயருங்க...” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.