சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திராவிட இனத்துக்கு அல்காரிதம்- உதயநிதி இப்போ..!

கம்ப்யூட்டருக்கு இருப்பதைப் போல திராவிட இனத்துக்கும் ஓர் அல்காரிதம் உண்டு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது கவன ஈர்ப்பாகியுள்ளது.

சிறப்புத்திட்ட செயலாக்கம், இளைஞர் நலன், விளையாட்டுத் துறைகளை கவனித்துவரும் அமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகளுக்கான விவாதத்தில் பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியது:

“ ’சேப்பியன்ஸ்- மனிதகுல வரலாற்றின் சுருக்கமான வரலாறு’ என்கிற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய யுவால் நோவா ஹராரி, அவருடைய உரை ஒன்றில், ”எப்படி கம்ப்யூட்டர் அல்காரிதம் இருக்கிறதோ அதைப்போல உயிரினங்களிலும் அல்காரிதம் உண்டு” என்று சொன்னார். அப்படி ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் எப்படி அல்காரிதம் இருக்கிறதோ அப்படி ஒவ்வொரு இனத்துக்கும் அல்காரிதம் இருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்படி நாம் திராவிட மாடல் எனச் சொல்கிறோமோ, அதேமாதிரி திராவிட அல்காரிதம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த திராவிட அல்காரிதம் ஏதோ ஓரிரு நாளில் உருவானது அல்ல. இதற்குத் தேவையான தகவல்களும் அனுபவமும் நீதிக் கட்சி காலத்திலிருந்தே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசியதற்காக அடித்துக்கொல்லப்பட்ட உடையார்பாளையம் வேலாயுதம் தொடங்கி, நீட் தேர்வால் கொல்லப்பட்ட தங்கை அனிதாவையும் கொண்டதுதான் இந்த திராவிட அல்காரிதம்.

நீட் தேர்வு நல்லதா கெட்டதா என்பதைப் புரிந்துகொள்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் புரிந்துகொண்டனர். இந்தித் திணிப்பை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் என மற்ற மாநிலங்கள் புரிந்துகொள்வதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் புரிந்துகொண்டார்கள்.

மற்ற மாநிலங்கள் எல்லாம் சிந்திப்பதற்கு முன் தமிழ்நாட்டில் கலைஞரால் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது.” என்று உதயநிதி பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com