துணை முதல்வர் என குறைத்து மதிப்பிடுகிறார்கள்! - திருமா

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்
Published on

'என்னை பிரதமர் என்ற அளவுக்கு உயர்த்தாமல், துணை முதலமைச்சர் என்ற அளவில் குறைத்து மதிப்பிடுகின்றனர்’ என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், திருமாவளவன் பேசியதாவது:

அம்பேத்கரை இழிவுபடுத்தியதில் இருந்து, பா.ஜ.க.வின் வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் மீது விமர்சனம் இருந்தால் விமர்சித்து கொள்ளுங்கள்; அதற்கு அவர்கள் பதில் சொல்வர். அம்பேத்கரை அறிவதற்கும், படிப்பதற்கும், அறிவும், ஞானமும் தேவைப்படும்.

அவரை பற்றி புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஞானமில்லை. அவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான், அவர் பட்டியலினத்தவர்.

எப்படியோ படித்து விட்டார்; அதனால், அரசியல் அமைப்பு சட்டம் இயற்ற வாய்ப்பு வந்தது என நினைக்கின்றனர். உயர்ந்த ஜாதியில் படித்தவர்கள் ஏன் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றவில்லை?

நீதிமன்றங்களில் சட்டங்களை படித்து வாதடுபவர்களை உயரத்தில் வைத்து பார்க்கின்றனர். அவற்றை எழுதியவர், எவ்வளவு ஆற்றல் படைத்தவராக இருந்திருப்பார். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு முன், தேசத்தை பற்றிய எவ்வளவு அறிவு இருந்திருக்கும்.

அப்போது சட்டம் படித்தவர்கள் பலர் இருந்தாலும், அவர்களால் அரசியலமைப்பு சட்டம் இயற்ற முடியவில்லை.

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில், அவரை யாரும் எளிதில் ஏற்கவில்லை. ஆனாலும், பல்வேறு இன்னல்களுக்கு பின், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி, அனைவருக்குமான ஜனநாயக உரிமையை பெற்று தந்தார்.

நம்முடைய மாநாட்டுக்கு லட்சக்கணக்கானோர் கூடினாலும் பெரியளவில் செய்தி வெளியிடப்படுவதில்லை.

ஆனால், ரசிகர் மாநாடு நடந்தால், ஒரு மாதத்திற்கு செய்தி வெளியிடப்படுகிறது. இது, மீடியாவின் உளவியல். எவ்வளவு கூட்டம் கூடினாலும், அடுத்த முதலமைச்சர் யார் என பேசவில்லை.

பிரதமர் என்ற அளவுக்கு என்னைக் குறித்து கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அங்கு தாவுகிறார், இங்கு தாவுகிறார்; துணை முதலமைச்சர் பதவி கேட்கிறார் என குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com