கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள், ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ. மழைப்பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக ஊத்தங்கரை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரி நிரம்பி வழிவதால், பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது. பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள், கார் ஆகியவை இழுத்துச் செல்லப்படும் காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 510 மி.மீ.மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர்.