முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் கே. பாலகிருஷ்ணன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் கே. பாலகிருஷ்ணன்

வாச்சாத்தி: உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை!

வாச்சாத்தி வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அமல்படுத்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

கே. பாலகிருஷ்ணன் முதலமைச்சரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

1. வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்முறை வழக்கில் 31 ஆண்டுகளாக நடந்து வரும் நீண்ட, நெடிய சட்டப்போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை அமல்படுத்துவது, குறிப்பாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு - அரசு வேலை - நிரந்தர வீடு, மற்றும் வாச்சாத்தி கிராமத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை உள்ளிட்டவற்றை அரசு தரப்பில் நிறைவேற்றுவது.

2. ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக கடுமையான தொழில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மின்சார வாரியத்தின் நிலை கட்டண உயர்வு மற்றும் பீக் ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றைத் திரும்பப் பெறுவது.

3. நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 36 முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்வது.

4. அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கிடுவது.

5. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, சரண்விடுப்பு வழங்குவது; சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் - ஓய்வூதியம் வழங்குவது; தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது; அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது.

6. இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, காலை சிற்றுண்டித் திட்டம் உள்ளிட்டு அரசின் நலத் திட்டங்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்குவது.

7. அரசாணை எண் 354 படி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வது.

8. மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகையினை வழங்குவது, ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வது, கேங் மேன் பணியாளர்களை நியமிப்பது.

9. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திரா செல்வி ஆகியோரின் பள்ளிப் படிப்பைத் தொடரவும், அக்குடும்பத்திற்கு அரசு வீடும், வேலையும் வழங்குவது, சந்திரா செல்விக்கு தமிழக அரசின் வீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குவது.

உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com