”நீங்க மஞ்சள் பத்திரிகையா...?’’ செய்தியாளர் மீது பாய்ந்த வைகோ!

வைகோ
வைகோ
Published on

பத்திரிகையாளரைக் கீழ்த்தரமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது.

இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

“ செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, இன்று (30.06.26) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது சமீபத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஒருகட்டத்தில் கேள்வி எழுப்பிய ஒரு பத்திரிகையாளரிடம் வைகோ அவர்கள் நேரடியாக வாதம் செய்ய ஆரம்பித்தார். அப்போது, “யார் நீ? எந்த பத்திரிகை என்று மரியாதை குறைவாக பேசியுள்ளார். “நீங்க மஞ்சள் பத்திரிகையா? திட்டமிட்டு வந்திருக்கீங்க, யார் உங்கள ஏவிவிட்டது?” என்று பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும், “நீங்க திட்டமிட்டு குழப்பம் செய்வதற்காக இங்கே வந்திருக்கீங்க” என்று வைகோ கூறியதும் அங்கு கூடியிருந்த மதிமுகவினர் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கோபமாக பேசிக்கொண்டே அவரை நோக்கி முன்னேறியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், தொண்டர்களை தடுத்து நிறுத்தாமல் அவர்களை மேலும் தூண்டிவிடும் வகையில் பத்தரிகையாளரை சுட்டிக்காட்டி “வெளிய அனுப்பு, வெளியே அனுப்பு” என்று தொண்டர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தொண்டர்கள் பத்திரிகையாளரை நோக்கி மேலும் முன்னேறி வரவே, அங்கு கூடியிருந்த சக பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த பத்திரிகையாளரை பாதுகாத்துள்ளனர். அரசியிலில் பழுத்த அனுபவம் பெற்ற திரு. வைகோ அவர்கள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. கடந்த 09.07.25 அன்று, விருநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை திரு.வைகோ அவர்கள் தகாத வார்த்தையில் திட்டியதுடன், அங்கு கூடியிந்த மதிமுக தொண்டர்களிடம் பத்திரிகையாளர்களிடமிருந்து ஒளிப்பதிவுக் கருவிகளை பறிக்கும்படி மேடையில் இருந்துகொண்டே வெளிப்படையாக உத்தரவிட்டார். தற்போது, தமிழகத்தில் முன்பு எப்போதும் நடந்திராத, பல அரசியல் நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் வகையில், தொடர்புடைய அரசியல் தலைவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டியது பத்திரிகையாளர்களின் கடமை. இதற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால், பதில் சொல்லாமல் கடந்து செல்வது அவரவர் உரிமை. ஆனால், கேள்வியே கேட்கக் கூடாது என்றும், “நீ எந்த பத்திரிகை, யார் சொல்லி கேள்வி கேட்கிறாய், இங்கிருந்து வெளியேறு” என்று பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசுவதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்ளும் மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

மூத்த அரசியல்வாதியான திரு. வைகோ அவர்கள், இதுபோன்ற நடவடிக்கையில் இனி ஈடுபடக் கூடாது.” என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com