நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவரின் உரை விவரம்:
”பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், தமிழகத்தில் விமான, இரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்ததால், வெள்ளம் சூழ்ந்து, பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விளைந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் மீட்பு- நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்.” என்று வைகோ பேசினார்.