நரசிங்க பாளையம் வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதி
நரசிங்க பாளையம் வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதி

வி.சி.க. – பா.ஜ.க. நிர்வாகிகள் மோதல்… மண்டை உடைப்பு!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச் சாவடியில் வி.சி.க. – பா.ஜ.க. நிர்வாகிகள் மோதிக் கொண்டதில் இருவரின் மண்டை உடைந்ததால், இங்கு வாக்குப் பதிவு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே நரசிங்கபாளையம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். பிற்பகலுக்குப் பிறகு, வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பள்ளியின் வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டமாக நின்று வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் இரு கட்சியினரையும் அங்கிருந்து வெளியேறும்படி கூறியுள்ளனர்.

அப்போது, வி.சி.க.வினருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது வி.சி.க. நிர்வாகி செல்வக்குமாரும், பா.ஜ.க. நிர்வாகி அருணும் உருட்டுக் கட்டையால் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இதில், இருவரின் மண்டையும் உடைந்து, இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் நரசிங்கபாளையம் வாக்குச்சாவடியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அரியலூர் எஸ்.பி. சண்முக ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இருப்பினும் பதற்றம் தணியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்பிறகு ஓட்டுப்பதிவு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com