வன்னியர் போல பறையர் உள் ஒதுக்கீடு- வி.சி.க. எம்.பி. அரசுக்குக் கேள்வி!
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் சாதியினருக்கு தனியாக கடந்த ஆட்சியில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதைப் போல பட்டியல் சமூகத்திலும் பெரும்பான்மையாக பறையர்-ஆதிதிராவிடர் சாதியினர் உள்ளனர் என்றும் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டுவரப்படுமா என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கான ஆதாரமாக தமிழ்நாட்டு அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தியின் தகவல் தொகுப்பை அவர் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து இரவிக்குமார் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள குறிப்பில், ”தமிழ்நாடு அரசு ஆர்டிஐ விண்ணப்பம் ஒன்றுக்கு வழங்கியுள்ள தகவலில் வேலை வாய்ப்பிலும், மருத்துவப் படிப்பிலும் வன்னியர் சமூகத்தினர் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்கள் கேட்கும் 10.5% இட ஒதுக்கீட்டைவிடக் கூடுதலாக அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அவ்வாறிருந்தும் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு மறுக்கவில்லை.
வன்னியர் சமூகத்தினருக்குத் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீடு கொடுத்ததற்குப் பிறகு வன்னியர்களைவிடப் பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும், அரசியல் அதிகாரத்திலும் மிகவும் பின் தங்கியிருக்கிற பறையர் - ஆதிதிராவிடரும் ஏன் அதுபோல உள் ஒதுக்கீடு கேட்கக்கூடாது? என்ற கேள்வி பறையர் - ஆதிதிராவிடர் மக்கள் மனதில் எழுந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
”தனிப்பட்ட உரையாடல்களில் அதை அவர்கள் வெளிப்படுத்தினாலும் தமிழ்நாடு அரசை நோக்கி அதை ஒரு கோரிக்கையாக இன்னும் முன்வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால்
வன்னியர் உள் ஒதுக்கீடுக்காக முதலில் சட்டம் இயற்றிய அதிமுக அதை ஆதரிக்குமா?
10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக அரசு அதுபோல பறையர் - ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா?
தமிழ்நாடு அரசு அவ்வாறு சட்டம் இயற்றினால் இப்போது 10.5% சட்டத்தை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும் மற்ற அரசியல் கட்சிகளும் அதை ஆதரிப்பார்களா?” என்றும் இரவிக்குமார் கேட்டுள்ளார்.