விஜய்யின் உடல்மொழி : மனித மாண்புகளுக்கு எதிரானது - திருமா

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
Published on

"காவல்துறை மானியத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையின்போது, தி.மு.க. தலைவரும் மேனாள் முதலமைச்சருமான ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை; மனித மாண்புகளுக்கு எதிரானது." விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடந்த திங்களன்று பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றிய குறிப்பின்போது, வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு, ஒருமாதிரியாக நடந்துகொண்டார். அவரின் இந்தச் செய்கை தமிழகம் முழுவதும் பரவலாக அதிர்வலைகளை உருவாக்கியது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் முதலிய பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

நீண்ட காலம் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த வி.சி.க. கனத்த அமைதி காத்துவந்தது. இந்த நிலையில், இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை விவரம் :

“ எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.

அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.

முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்த நாள் தி.மு.க. தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின்போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.

மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான தி.மு.க. தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்கு உரியதாகும். அமைச்சர் அதனைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும்.” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com