“அவதூறை வீசுகிறார் வேல்முருகன்”- அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்
Published on

“கேட்ட இடம் கிடைக்கவில்லை என்பதற்காக அவதூறை வீசுகிறார் வேல்முருகன்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நேற்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “முதல்வர் ஸ்டாலினை பார்க்க அவரது வீட்டில் அமைச்சர் துரைமுருகன் 3 மணி நேரம் காத்திருந்து, பின்னர் அவரை பார்க்க அவரது செயலாளர் மறுத்ததால் கண்ணீருடன் காரில் ஏறினாரே, இதை இல்லை என துரைமுருகன் மறுக்க முடியுமா” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “துரைமுருகன் கட்சியின் பொதுச்செயலாளர், அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். அவர் முதலமைச்சரை பார்க்க முடிவதில்லை என்று சொல்வதை, இரண்டு மாதத்திற்கு முன்பு சொல்லியிருந்தால் பேசியிருக்கலாம். அவருக்கு கேட்ட இடம் கொடுக்கவில்லை என்பதற்காக அவதூறு பரப்புகிறார். அதை ஏற்க முடியாது.” என்றவர், எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

“ஒரு காலத்தில் வட இந்திய தலைவர்கள் அதிமுக தலைவரை பார்ப்பதற்கு அவரின் வீட்டு வாசலுக்கு வந்தனர். அந்த நிலையை மாற்றி, ஒவ்வொரு முடிவையும் எடுப்பதற்காக டெல்லிக்கு பறந்து போய் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் மட்டுமல்ல அவரின் கூட்டணியில் உள்ள கட்சியினரும் டெல்லிக்கு போய் வருகிறார்கள். கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என டிடிவி தினகரன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

நோட்டாவுக்கு கீழே இருந்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் அதிக இடங்களை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எதிர்காலத்தில் பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை, மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்கு வந்த நிலை அதிமுகவுக்கு வரப்போகிறது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறார்.

அமித் ஷா கொடுக்கும் ஸ்கிரிப்டை அப்படியே படிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மோடியா லேடியா என்று கேட்டு பாஜகவுக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு எல்லாம் மோடி தான் சொல்லி, ஜெயலலிதாவின் ஆன்மாவையே சவடிக்கும் நிலைமைக்கு சென்றுவிட்டார் எடப்பாடி.

ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டு 2 அல்ல 3 முறை பேசிய பின்பும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்தது தவறு என்பது கூறுவது தவறு. தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்த கட்சி. அதனால் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் திமுக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரித்து அதை முதலமைச்சருக்கு வழங்கி அதன் பின்னர் வெளியிடுவோம். அனைவரின் கருத்துகளை கேட்டு அதன் பின்னர் வெளியிடுவோம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற வகையில் தமிழகம் இருக்கிறது.

மற்றவர்களை விமர்சனம் செய்வதே எடப்பாடியின் வேலை. முதலில் அவர் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும், பின்னர் மற்றவர்களை பேச வேண்டும். என்டிஏ கூட்டணிக்கு தோல்வி தான் என தெரியும். அதனால் பயத்தால் பேசி வருகிறார்கள்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com