”தமிழகத்தின் கனிம வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை நீதிமன்றத்தில் இரத்து; அரசு என்ன செய்யப் போகிறது? வேடிக்கைபார்க்கப் போகிறதா”? என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் வரிசையாகக் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
”தமிழகத்தின் கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானக் கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்குத் தமிழக அரசு விதித்திருந்த தடையைச் சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
மாநிலத்தின் கட்டுமானத் தேவைகளுக்குப் போதிய கனிம இருப்பை உறுதிப்படுத்தவும், இயற்கை வளங்கள் கட்டுப்பாடின்றி வெளியேறுவதைத் தடுக்கவும் அரசு எடுத்த இந்த நடவடிக்கையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அப்போதே வரவேற்றது. அந்த நிலைப்பாட்டில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
09.07.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (G.O. Ms. No.15) மூலம், 2011-ஆம் ஆண்டு கனிமவள விதிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 'விதி 3-A'-ஐ, 17.11.2026 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவித்து ரத்து செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கான தடையும் நீங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில், மண்ணின் வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசின் பொறுப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை.
கொண்டுவரப்பட்ட விதி நீதிமன்றத்தில் இரத்து செய்யப்பட்ட நிலையில், சட்டரீதியாக நிலைக்கக்கூடிய மாற்று நடவடிக்கையை அரசு ஏன் உடனடியாக மேற்கொள்ளவில்லை?
மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, தனித்துவமான கனிமவளக் கொள்கையை உருவாக்க அரசுக்கு ஏன் தயக்கம்?
சட்டவிரோதக் கனிமக் கடத்தலையும், அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதையும் தடுக்க அரசு எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள் என்ன?
நீதிமன்றத்தின் சட்ட ஆய்வில் நிலைத்து நிற்கக்கூடிய வகையில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை உருவாக்க அரசு தயாராக இல்லையா?
ஒரு அரசாணை இரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதற்காகக் கனிம வளங்களை காக்கும் முயற்சியை அரசு விட்டுவிடக் கூடாது. சட்டத்தில் நிலைக்கக்கூடிய மாற்று வழிமுறைகளை வகுத்து, இயற்கைச் செல்வங்களை பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். எனவே, தமிழக அரசு உடனடியாக விழித்துக்கொண்டு, உரிய மாற்றுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.