சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த அறிவிப்பு விவரம்:
"மகளிரின் பயணச் சுதந்திரம், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது.
தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண, மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் ஆகிய பேருந்துகள், புறநகர்ப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் அனுமதிக்கப்படுவதில்லை.
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக
1) மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.
2) மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர், மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்பு, மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை.
இத்திட்டத்தின்கீழ் திருநரும் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன்மூலம் ஆண்டுதோறும் ரூ. 6000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். " என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.