
கால்நடை பராமரிப்புத் துறைக்கு கால்நடை மருத்துவம் படித்தவரையே தொழில்நுட்ப இயக்குநராக நியமிக்கவேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சேலத்தில் நடந்த அதன் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்பட்டு 2005க்கு முன்பு நடைமுறையில் இருந்ததுபோன்ற தொழில்நுட்ப இயக்குநர் பதவி வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தீர்மான விவரம்: “கால்நடை மருத்துவ சேவைகள், கால்நடை நலம் சம்பந்தப்பட்ட கொள்கைகளை வடிவமைத்தல், நோய் கட்டுப்பாட்டு திட்டங்கள், தடுப்பூசி திட்டமிடல், அவசர கால்நடை சுகாதார மேலாண்மை, மாநில மற்றும் மத்திய அரசுத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு, கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறையில் உள்ள ஊழியர்களின் பணிநிர்வாகம், தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் போன்ற முக்கிய பொறுப்புகளை உள்ளடக்கிய "தொழில்நுட்ப இயக்குநர் பதவி, கால்நடை மருத்துவக் கல்விபயின்று, சட்டப்பூர்வ பதிவு மற்றும் தொழில்முறை அனுபவம் பெற்றவரால் மட்டுமே வகிக்கப்பட வேண்டிய உயர்நிலைத் தொழில்நுட்பப் பதவியாகும் என்பது இச்செயற்குழுவின் ஒருமித்த கருத்தாகும். 2005ஆம் ஆண்டிற்கு முன்பு நடைமுறையில் இருந்த பதவி உயர்வு முறையை மீண்டும் அமல்படுத்தி, தகுதியான கால்நடை மருத்துவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கி தொழிநுட்ப இயக்குநர் பதவி துறையில் உருவாக்கப்பட்டு பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ”
தற்போது இப்பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளையே பொறுப்பாக நியமிக்கும் வழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரை, மந்தைவெளி அர்சு புறம்போக்கு நிலத்தினை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிகளை விரைவாக நிரப்பிடக் கோரியும் மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.