சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

5 துணைவேந்தர் பதவிகள் காலி - எப்போது நிரப்புவது?

Published on

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி ஐந்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. உரியவர்களை நிரப்பாமல் வைத்திருப்பதால் பத்தாயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளன. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களின் எண்ணிக்கை ஐந்தாகியுள்ளது.  


ஏற்கெனவே, சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்  நியமிக்கப்படாமல் இயங்கிவருகின்றன.

”இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 அக்டோபர் மாதம் முதலும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் மாதம் முதலும் சுமார் இரு ஆண்டுகளாக காலியாக உள்ளன.  மேலும் இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 


குறிப்பாக, “தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களை விட அண்ணா பல்கலைக் கழகம் மிகப்பெரியது. அதிக பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கக் கூடியது. அத்தகைய பல்கலைக் கழகம் தலைமை இல்லாமல் இருந்தால் அதன் செயல்பாடுகள் அடியோடு முடங்கி விடும் ஆபத்து உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “இவை தவிர புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையவிருக்கிறது. புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டிற்குள் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர் இன்றி தடுமாறும் நிலை உருவாகும். உயர்கல்வி வளர்ச்சிக்கு இது நல்லதல்ல.” என்றும் இராமதாசு கூறியுள்ளார். 

சென்னையில் இன்று காலையில் நடைபெற்ற பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் கருத்தரங்கிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதில், ” பல்கலைக் கழகங்களுக்கு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி மாநில அரசு மான்யங்களைக் குறைத்துள்ளது. மாநில அரசு பல்கலைக் கழகங்கள் மிகப்பெரும் நிதிச் சுமையில் சிக்கியுள்ளது.‌ சில பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.  மாநில அரசுப் பல்கலைக் கழகங்களுக்கு முழுமையான மான்யங்களை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.‌ துணை வேந்தர் நியமனங்களில் என்ன சிக்கல் என்பதைக் கண்டறிந்து துணை வேந்தர்கள் உடனடியாக நியமிக்கப்படத் தேவைப்பட்டால் நீதிமன்றங்களை நாடுவது முதலிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள‌ வேண்டும்‌.” என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com