“சொந்த படப் பிரச்சினைக்கே வாய் திறக்காத விஜய்...!”

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
Published on

‘‘சொந்த படப் பிரச்சினைக்கே வாய் திறக்காத விஜய், மக்கள் பிரச்சினைக்கு எப்படி வாய் திறப்பார்?’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “துணை முதலமைச்சர் உதயநிதி திட்ட, திட்ட அதிமுகவுக்கு ஆதரவு பெருகிவிட்டது. தமிழக வரலாற்றிலே டிஎன்பிஎஸ்சி தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதே கிடையாது. இரவு, பகலாக ஆண்டுக்கணக்காக இந்த தேர்வுக்கு படித்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பில் உள்ள உதயநிதிக்கு அரசியல் பண்பு தெரியவில்லை. மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்திய ஆதவ் அர்ஜூனா, தூய்மையின் பிறப்பிடம், தியாகத்தின் பிறப்பிடமான குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால், அவர் நியாயம், நீதியை பற்றி பேச வேண்டியதுதான். நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சி வளர்ந்த குடும்பம், அவரது குடும்பம். லாட்டரி சீட்டையே ஜெயலலிதா ஒழித்தார்.

ஆனாலும், மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டை நடத்தி வருகிறார்கள். அவர் அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஊடகத்தில் பேசுவது, எக்ஸ் தளத்தில் பதிவுகளை போடுவதோடு அரசியல் முடியவில்லை. மக்களுக்காக போராட்டம் நடத்த வேண்டும்.

நேற்று அரசு தேர்வு எழுத முடியாத மாணவர்கள் நலனுக்காக இவர்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தார்கள்? தனது சொந்த படப் பிரச்சினைக்கே வாய் திறக்காத விஜய், மக்கள் பிரச்சினைக்கு எப்படி வாய் திறப்பார்?” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘‘பாஜக கூட்டணியில் அதிமுக பத்து கட்சிகளில் ஒரு கட்சி அவ்ளவுதான். எங்களுக்கும் திமுகவுக்குதான் போட்டி’’ என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு, ‘‘அவரை செல்லா காசு என்று சொல்லிவிட்டேன். அந்த செல்லா காசு ஆயிரம் பேசும். அதை நகைச்சுவையுடன் கடந்து சென்றுவிட வேண்டும்’’ என்றார்.

ஆனாலும் செய்தியாளர்கள், செங்கோட்டையன் விஜய்யை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்று கூறுகிறாரே என்று கேட்டனர். அதற்கு செல்லூர் ராஜு, “எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்க போகிறார்? வேண்டுமென்றால் கல்லூரிக்கு முதல்வராக்கலாம்’’ என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com