
சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய், கூட்ட நெரிசலில் சிக்கி கீழே தடுமாறி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு விஜய், நேற்று (டிசம்பர் 28) இரவு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் விஜய்யை காண தவெக தொண்டர்களும் ரசிகர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர். அப்போது, ரசிகர்களை பார்த்து கையசைத்து பறக்கும் முத்தம் கொடுத்தார் விஜய்.
இதன் பின்னர் விஜய் காரில் ஏற சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரது பாதுகாவலர்கள் விஜய்யை தாங்கி பிடித்து பாதுகாப்பாக காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைலாகி உள்ளது.
விஜய்யை தள்ளிவிட்டார்களா?
விஜய்யின் அருகிலேயே வந்த ப்ளூ சட்டை அணிந்த நபர் ஒருவர் விஜய்யின் மார்பு மீது கை வைத்து தள்ளுவது போல் தெரிகிறது. அதன் பின்னரே விஜய் கீழே விழுகிறார். உடனே, ப்ளூ சட்டை நபரும் பதறிப்போய் விஜய்யை தூக்கியும் விடுகிறார். இதனால் அந்த ப்ளூ சட்டை அணிந்த நபர் யார் என்று விஜய் ஆதரவாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.