
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது: “சென்னை - துறைமுகம் பகுதியில் நாம் அமைதியான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டோம். வீடு வீடாக அந்த பிரச்சாரப் பணி நடைபெற்றது. அப்போது நமது கர்ப்பிணி சகோதரி ஒருவரின் வயிற்றில் கை வைத்தார்கள். அப்போதே நம் தலைவர் முடிவு செய்து விட்டார், நாம் முதலில் இறங்க வேண்டியது வடசென்னையில்தான் என்று.
வடசென்னை மீது ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கி வைத்துள்ளது. இங்குள்ள மக்கள் அன்பானவர்கள். அனைவரும் உழைப்பாளிகள். அதை நாம் அறிவோம். இந்த நேரத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கருதுகிறேன்.
வடசென்னையை வளர்ச்சி பாதைக்கு நம் தலைவர் அழைத்துச் செல்வார். வளர்ச்சியை மட்டுமே அவர் உருவாக்குவார். நிச்சயம் அவரது மனம் வடசென்னையை நோக்கிதான் உள்ளது என நான் கணிக்கிறேன்.
ஏனென்றால், வட சென்னையை இந்த 50 முதல் 60 ஆண்டுகளாக ‘ஒதுக்கி, ஒதுக்கி’ வைத்த திமுகவின் சூழ்ச்சியை தூக்கி அடிக்கும் திறன் கொண்ட ஒரே தலைவர் நம் தலைவர்தான். சென்னை - பெரம்பூர் தொகுதியில் நம் தலைவர் போட்டியிட வேண்டும் என தீர்மானத்தை இந்த கூட்டத்தில் முன்மொழிகிறேன். இதை பொதுச்செயலாளர் வழிமொழிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் தவெக வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் சரி, அது நம் தலைவர்தான் என நாம் கருத வேண்டும். ஏனெனில், நம் தலைவரை முதல்வராக பொறுப்பேற்க செய்ய வேண்டும். சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். சென்னை, திமுகவின் கோட்டை என்று சொல்கிறார்கள். அதை நாம் உடைக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து ஆனந்த் பேசுகையில், “ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.” என்றார்.