விஜய் திரைப்படத்தில் தான் சூப்பர் ஸ்டார்… இபிஎஸ் விளாசல்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்தியா டுடே   நடத்திய ‘Tamil Nadu Round Table 2026’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டன. அவற்றுள் சில… கலந்துகொண்டு பேசினார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், சில முக்கியமான கேள்வி

டிடிவி தினகரனை கூட்டணியில்  இணைத்துக்கொள்ள எப்படி  முடிவெடுத்தீர்கள்?

“ஒரு காலத்தில் திமுக காங்கிரஸை கடுமையாக எதிர்த்தது. அண்ணா அறிவாலயத்தில் மேல் தளத்தில் ரெய்டு நடக்கிறது. கீழ் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது.  அவர்கள் எல்லாம்  கூட்டணி அமைக்கும் போது… எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கருத்து வேறுபாடுகள் எல்லாம் கலைந்துவிட்டன. இன்று ஒன்றாக இணைந்துள்ளோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாக்கு வங்கி உண்டு. அதனடிப்படையில் தான் கூட்டணி அமைக்கப்படும். 2021 தேர்தலில் 2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்திருப்போம். அதை இழந்த காரணத்தினால் எதிர்க்கட்சியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு கட்சியும் , அந்த கட்சியை வலுப்படுத்த வேண்டும்.  அந்த கட்சியின் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் வரவேண்டும்.

ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுக வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

அது உட்கட்சி பிரச்சினை. விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.

காங்கிரஸ் திமுகவுக்கு இடையே பிரச்சினை இல்லை என்றும் கூட்டணி ஆட்சியே கிடையாது என்றும் முதல்வர் சொல்லியிருக்கிறாரே?

அது அவர்களது கூட்டணி பிரச்சினை. அதில் தலையிடுவதற்கு எங்களுக்கு எந்த தார்மீக பொறுப்பும் கிடையாது. இருந்தாலும் முதல்வர் இப்படி சொன்ன பிறகு காங்கிரஸ் எம்.பி ஒருவர் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படிதான் காங்கிரஸ் திமுக இடையே குழப்பம் இருப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.

அதே கேள்வி… அதிமுக ஆட்சியில் பாஜக பங்கு பெறுமா?

எங்கள் கூட்டணி தெளிவாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. அதிமுக ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா சொல்லிவிட்டார். முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்தான். யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

ஆட்சியில் பங்கு பற்றி உங்கள் கருத்து என்ன?

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

ஆட்சியில் பங்கு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகள் தெளிவாக உள்ளன.

எத்தனை முனை போட்டிகள் இருக்கும்?

தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் தெரியவரும்.

தமிழக தேர்தலில் விஜய் ஒரு காரணியாக இருப்பாரா?

ஒரு தேர்தலை கூட அந்த கட்சி சந்திக்கவில்லை. ஒரு தேர்தலையாவது சந்தித்தால் தான் அவர்களுக்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்பது தெரியவரும்.  எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எடுத்தவுடன் முதல்வராகவில்லை. பல ஆண்டுகாலம் உழைத்தார்கள்.

அந்த கட்சியில் எம்.ஜி.ஆரை பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

எம்.ஜி.ஆர் பேரை சொன்னால் தான் கட்சியே நடத்த முடியும். எங்கள் தலைவர் மக்கள் செல்வாக்கு உடையவர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரு சூப்பர் ஸ்டார்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் விஜய்க்கு வாய்ப்பு இருக்கிறதா?

திரைப்படத்தில் தான் அவர் சூப்பர் ஸ்டார்… அரசியலில் இல்லை.

உங்களுக்கு பிடித்த விஜய் படம் எது?

நான் தியேட்டருக்கு சென்று 25 வருடம் ஆகிவிட்டது. தொலைக்காட்சிகளில் வரும் படங்களை மட்டும்தான் பார்க்கிறேன். 

அதிமுக – பாஜகவிடம் அடிமையாக இருக்கிறது என்று திமுக விமர்சிக்கிறதே?

திமுகதான் காங்கிரஸிடம் அடிமையாக இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனியாகத்தானே நின்றோம். அடிமையாக இருந்திருந்தால் கூட்டணியில் இருந்திருப்போமே. ஸ்டாலினுக்கு பேச வேறு எதுவும் இல்லை. 1999 நாடாளுமன்றத் தேர்தலின் போது இவர்கள் கூட்டணி அமைத்திருந்தார்களே. அவர்கள் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமையா?

இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி. 

logo
Andhimazhai
www.andhimazhai.com