தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அதன் தலைவரும் நடிகருமான விஜய் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் அதிரடியாக குதித்தார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வித்திட விரும்புவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். தற்போது கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், வரும் ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மிகப்பெரிய அளவில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், “மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்” என்றும் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com