
விஜய் கட்சியினர் இன்னும் ஸ்கூல் தான் படித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஸ்வத்தாமனிடம், தவெக-வினருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் மறுக்கப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி இருக்கிறாரே..? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, ”எஸ்ஐஆர் படிவம் 18 வயது நிரம்பியவர்களுக்குத் தான் கொடுப்பார்கள். விஜய் கட்சியில் இன்னும் பலர் ஸ்கூல் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எஸ்ஐஆர் படிவம் தரப்படமாட்டாது. தவெக-வைப் பொறுத்தவரை திமுக என்ன சொல்கிறதோ, அதை அப்படியே அவர்களும் சொல்கிறார்கள்.
எஸ்ஐஆர் பற்றி முதல்வர் ஸ்டாலின் 8 நிமிட வீடியோ வெளியிட்டால், விஜய் எட்டரை நிமிட வீடியோ வெளியிடுகிறார். திமுக-வின் ஊதுகுழலாகவே தவெக செயல்படுகிறது. அவர்களுக்கு என்று தனிப்பட்ட கொள்கையோ, கருத்தோ கிடையாது.” என்று கூறியுள்ளார்.
மேலும், “ஆட்சிக்கு வரும் தகுதியையே இன்னும் வளர்த்துக் கொள்ளாத தவெக, ஆட்சியில் பங்கு தருவோம் என்று சொல்வது, வங்கியில் அக்கவுன்டே இல்லாமல் செக் கொடுப்பது போல் தான். இல்லாத ஆட்சியில் அவர்கள் யாருக்குப் பங்கு கொடுக்க போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.