
மதுரையில் நேற்று முதல் இந்த ஆண்டின் புத்தகக்காட்சி விமரிசையாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் வழக்கம்போல மாலை வாசகர்களைக் கவரும் பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. வரும் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று விஜய் தொலைக்காட்சி புகழ் இராமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
தொலைக்காட்சியில் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் கலைஞரான அவர் எப்படி புத்தக விழாவின் சிறப்பு விருந்தினராக அழைப்பது எனத் தொடங்கி, வேறு எழுத்தாளர்களே கிடைக்கவில்லையா, நாங்கள் எல்லாம் உள்ளூரில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம் என ஒரு சுற்று அவரை அழைத்ததற்காக அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கூறி வருகின்றனர்.
இன்னொரு தரப்பிலோ, அவர் ஓரளவுக்கு நல்ல வாசகர்; ஏன் அவரைக் கூப்பிடக்கூடாது என எதிர்க்கேள்விகளை வைத்துவருகின்றனர்.
வேறு சிலரோ, ஏன் புத்தக விழா என்றால் எழுத்தாளர்கள்தான் பேசவேண்டுமா? இராமரைப் போன்றவர்கள் பேசக்கூடாதா என இன்னொரு பார்வையை எடுத்துவைக்கின்றனர்.
வழக்கம்போல இப்படியான சச்சரவுகளையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் சமூக ஊடகவாசிகளோ, நேற்று மகாவிஷ்ணு, இன்று இராமர் என நக்கலாகப் பேசி பதிவிட்டுவருகின்றனர்.