விஜய்
விஜய்

நீட் ... முதல் முதலாக வாய் திறந்த விஜய்!

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

பள்ளி இறுதி பொதுத்தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் இரண்டாவது நாள் நிகழ்வை நடிகர் விஜய் இன்று நடத்திவருகிறார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில் விஜய் பேசியதாவது:

“நீட் தேர்வால் கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே சத்தியமான உண்மை.

நீட் தேர்வு குறித்து மூன்று முக்கிய பிரச்னை இருப்பதாகப் பார்க்கிறேன். ஒன்று, மாநில உரிமைக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது. 1975-க்கு முன்னர் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்தது. இது முக்கியமான பிரச்னையாகும்.

இரண்டாவது, ’ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு.’ இது அடிப்படையில் கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரான விஷயம். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றமாதிரி பாடத்திட்டம் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைக்காக மட்டுமே கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பன்முகத்தன்மை பலமே தவிர; பலவீனம் இல்லை.

மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி? கிராமப்புற மாணவர்களுக்கு இது எவ்வளவு கடினமான விஷம்.

மூன்றாவது விஷயம், நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் நமக்குத் தெரியும். இதனால் நீட் தேர்வு மீது இருந்த நம்பிக்கை மக்களுக்குப் போய்விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வு தேவையில்லை. இதற்கு தீர்வு என்றால், நீட் விலக்குதான். நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இந்த பிரச்னை தீர்க்க வேண்டும்.

இந்த பிரச்னையை முழுமையாகத் தீர்க்க என்ன வழியென்றால், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் உள்ளதென்றால், ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பைத் திருத்தி, ‘சிறப்பு பொதுப்பட்டியல்’உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.

விஜய்
விஜய்

இப்போதுள்ள பொதுப் பட்டியலில் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும், அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. அதனால் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரவேண்டும்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துக் கல்லூரிகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்திக் கொள்ளட்டும்.

இது உடனே நடக்காது என்று தெரியும், அப்படியே நடந்தாலும் அதை நடக்கவிடமாட்டார்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஜாலியா படிங்க. இந்த உலகம் மிகப்பெரியது. நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.” என்று விஜய் பேசி முடித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com