திமுக எம்.பி. கனிமொழிக்கு அமித்ஷா, விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
திமுக துணை பொதுச்செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கனிமொழி தனது 58ஆவது பிறந்தநாளை இன்று (ஜனவரி 5) கொண்டாடுகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் கட்சி பாகுபாடு இன்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கனிமொழியை தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கனிமொழிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் திமுகவினரும் தவெகவினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் கனிமொழிக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் கனிமொழிக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, திமுக துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.