கோட் படம் தலைப்பு சனாதனம் இல்லையா?- விமர்சிக்கும் எம்.பி.!
நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் இன்று சிறப்புக் காட்சியுடன் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதைத்தவிர தமிழர்கள் வாழும் வெளி மாநிலங்களிலும் நாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
காலை முதலே விஜய்யின் ரசிகர்களும் பொது பார்வையாளர்களும் படத்தைப் பார்த்து சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் படம் பற்றி விமர்சித்து கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள கருத்து:
”விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157).” என்று இரவிக்குமார் கூறியுள்ளதைப் பற்றி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வரத் தொடங்கியுள்ளன.