விஜய் அரசியல்... தமிழகம் மாறப்போகிறது! – அண்ணாமலை ஆருடம்
விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக் கூடாது எனவும் புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போடியிடப் போவதில்லை என அறிவித்த அவர், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
“தமிழகத்தில் இன்று நான்கு முனை போட்டி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, புதியதாக நடிகர் விஜய் வருகிறார். நடிகர் விஜய்யை நான் ஏற்கனவே அரசியலுக்கு வரவேற்றுள்ளேன். நிறையபேர் அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு வாய்ப்புகள் இருக்கும். அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக்கூடாது. புதியவர்கள் வரட்டும். அண்ணன் சீமான் இருக்கிறார். அவரும் வலிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்களிடம் எல்லா வாய்ப்பையும் வைப்போம். தமிழக அரசியல் 2026இல் அடியோடு மாறப்போகிறது. இதனை எத்தனை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை'' என்றார்.
இதனைத் தொடரந்து, திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கூறியதாவது:
“ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம். செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.