தமிழ் நாடு
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அதைத் தொடர்ந்து, விக்கிரவண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று விக்கிரவாண்டி உட்பட நாடளவில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஜூலை 10 ஆம் தேதி தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், விழுப்புரம் மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருந்துவருகிறார்.