வியட்நாமிய மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தூத்துக்குடியில் ரூ.7,000 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
மின்சார கார்களை மட்டும் உற்பத்தி செய்யும் இந்த ஆலையில், ஸ்கூட்டர், பேருந்து ஆகியற்றையும் தயாரிக்கும் பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த விரிவாக்கத்தின் மூலம் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2 லட்சம் மின்சார கார்கள், 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள், 2,000 மின்சார பேருந்துகளாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் அதிகரித்துவரும் மின்சார வாகனங்களின் தேவைகளை இந்தப் புதிய பிரிவு பூர்த்திசெய்யும்.
விரிவாக்கத் திட்டத்தில் புதிய உற்பத்தித் தளங்கள், பட்டறைகள், சோதனைக்கூடங்கள் ஆகியவை அமையவுள்ளன.
ஒரு முக்கிய மின்சார வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்னும் குறிக்கோளை அடைய இந்த ஆலையும் பங்களிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, தமிழகத்தில் வாகன உதிரிபாக நிறுவனங்கள், வாகன உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய உற்பத்தியாளர்கள் விரும்பும் ஒரு சிறந்த உற்பத்தி தளமாக தமிழகம் மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.