
கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூர், மற்றும் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுகவை விமர்சித்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
மேலும் வில்லிவாக்கம் தொகுதியிலும் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி அவருடைய பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விஜய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரை செய்ததாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் கொடுத்த விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது புகார் எழுந்த நிலையில், நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குமார் அளித்த புகாரில் விஜய் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிக கூட்டத்தை கூட்டியதற்காக தவெக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா மீதும் 2 பிரிவுகளின் கீழ கொடுங்கையூர் போலீஸார் வழக்குப்திவு செய்துள்ளனர்.