தொடரும் துயர்... பட்டாசு விபத்துகளின் மாவட்டமா விருதுநகர்?

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து
Published on

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

பட்டாசு ஆலைகள் முக்கியமான தொழிலாக இருக்கும் விருதுநகர் மாவட்ட வட்டாரத்தில் வெடிவிபத்துகள் அடிக்கடி நடப்பதும் அதில் மனித உயிரிழப்புகள் நிகழ்வதும் அதிகரித்தபடி இருக்கின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக பிற மாவட்டங்களிலும் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்துவருவதை அரசு ஆவணங்களே பதிவுசெய்துள்ளன. ஓரிருவர் படுகாயம் அடைந்து அது பதிவாகாமலே போகும் சம்பவங்கள் எத்தனையோ என்கிறார்கள் தொழில் வட்டாரத்தில். 

வெடி விபத்துகளில் பலர் படுகாயம் அடைந்து உயிரிழக்க நேரும்போது பரவலான கவனம் பெற்றுவிடுகிறது என்பது இவர்களின் தகவல். 

2022 ஜனவரி 2இல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு. 

ஜனவரி 30: விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் நாட்டார்மங்களம் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஆறுமுகம், குபேந்திரன் ஆகியோர் சாவு. தெய்வேந்திரன், கணேசபாண்டி ஆகியோர் காயம். 

பிப்ரவரி 25: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு. 

ஏப்ரல் 20: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மாதன்கோவில்பட்டியைச் சேர்ந்த முப்பத்து இரண்டே வயதான அரவிந்த் உயிரிழந்தார். 

2023 அக்டோபர்: 

4ஆம் தேதி மயிலாடுதுறையில் 4 பேர்:

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் தீ விபத்தில் நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

9ஆம் தேதி அரியலூரில் 9 பேர்: அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 

17ஆம் தேதி 11 பேர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி, சிவகாசி வட்டம், மங்களம் கிராமம் இரு வேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில்  தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 

டிசம்பர் 15இல் ஒருவர்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு. 

2024 ஜனவரி 24-ல்  2 பேர்

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், வச்சக்காரபட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 2 பேர் உடனடி மரணம்; 2 பேர் படுகாயம்.  

பிப்ரவரி 17-ல் 10 பேர்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள், 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பிப்ரவரி 24-ல் ஒருவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் ஒருவர் இறப்பு. 

மே 9இல் 8 பேர் 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 5 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மே 20-ல் புதுக்கோட்டையில் ஒருவர்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு. 

மே 16-ல் மன்னார்குடியில் ஒருவர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஒருவர் வெடிவிபத்தில் உயிரிழப்பு. 

இந்தப் பட்டியல்களில் சம்பவ நாளன்று அந்த இடத்திலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com