முதுபெரும் பத்திரிகையாளர் வி.என்.சாமி
முதுபெரும் பத்திரிகையாளர் வி.என்.சாமி

தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பெறும் 92 வயது வி.என்.சாமி யார்?

சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பணியாற்றிவரும் சிறந்த இதழாளருக்கான 2022ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது, முதுபெரும் இதழாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

1931ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி பிறந்த சாமிக்கு, தற்போது வயது, 92. இவர், மதுரையில் வசித்துவருகிறார்.

இதழியல் துறையில் இவர் சாதித்தது என்ன?

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையாளராகப் பணியாற்றிய வி.என். சாமி, தொடக்கத்தில் தந்தை பெரியாரின் பேச்சுகளை விடுதலை ஏட்டில் செய்தியாக எழுதி வந்தார்.

பின்னர், மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட தமிழ்நாடு நாளேட்டிலும், 1957 முதல் சென்னையில் சுதேசமித்திரன், எங்கள் நாடு, தினச்செய்தி ஆகிய நாளேடுகளில் 10 ஆண்டுகளும் செய்தியாளராகப் பணியாற்றினார்.

பின்னர்,1968 ஆம் ஆண்டில் தினமணி நாளேட்டில் சேர்ந்தவர் 20 ஆண்டுகளுக்கும் மேல் அங்கு பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார்.

பின்னர் அதே தினமணி ஏட்டில் அரசியல் நிகழ்வுகள் குறித்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

துக்ளக் இதழிலும் வி.என். சாமி தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.

இதழ்ப் பணியுடன் புத்தகங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டார், வி.என்.சாமி.

இவர் எழுதிய ’புகழ்பெற்ற கடற்போர்கள்’ எனும் நூல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருதைப் பெற்றது.

பார்வை விஞ்ஞானம் எனும் கண்பார்வை பற்றிய அறிவியல் நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசை வென்றது.

மேலும், உலக நாடுகளில் தேர்தல் முறைகள், சுற்றுச்சூழலும் பாதுகாப்பும், இந்திய விடுதலைப் போரில் வெளிநாட்டுப் பெண்கள், பாக்டீரியாக்கள், விடுதலைப் போரில் தமிழக மகளிர், விடுதலைப் போரில் வீரதீரச் செயல்கள், இந்திய விடுதலைப் போரில் புரட்சிப் பெண்கள், புராதன இந்தியாவில் அறிவியல் மேதைகள், விடுதலைப் போரில் முஸ்லிம்கள், இந்திய விஞ்ஞானிகளின் கடல் வள ஆய்வுகள், உயிர்காக்கும் வைட்டமின்கள், இந்திய விடுதலைக்கு இன்னுயிர் ஈந்த வீராங்கனைகள், ராணுவப் பழமொழிகளும் மூதுரைகளும் ஆகிய நூல்களையும் சாமி எழுதியுள்ளார்.

மொழியாக்க நூல்களையும் எழுதியுள்ள இவர், தமிழ்க் கடல் பதிப்பகம் எனும் பெயரில் புத்தகங்களை வெளியிடவும் செய்துள்ளார்.

தன்னுடைய 92 வயதிலும் சுறுசுறுப்போடு எழுத்துப் பணியில் ஈடுபட்டு வரும் இவருக்கு, தமிழக அரசின் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com